புதிதாகச் சிந்தித்தல்: தமிழர்களும் நினைவுச் சின்னங்களும் | மரபுரிமைகளைப் பறைதல் | பாக்கியநாதன் அகிலன்
Description
பண்பாட்டு மரபுரிமையின் மிக முக்கியமான பகுதியாக நினைவுச் சின்னங்கள் காணப்படுகின்றன. நினைவுச் சின்னம் (monuments) என்பது ‘உலகளாவிய ரீதியில் பெறுமதிமிக்கதும் வரலாறு, அழகியல், இனவியல் அல்லது மானுடவியல் ரீதியாக முதன்மை வாய்ந்ததுமான கட்டடங்கள், சிற்பங்கள், ஓவியங்கள், அகழ்வாய்வு எச்சங்கள், குகை வாழிடங்கள், சாசனங்கள் முதலியவற்றைக் குறிப்பதாகும்’ என யுனெஸ்கோவின் (UNESCO) 1972 இற்குரிய விதிக்கோவை வரையறை செய்கிறது. 1992இல் ‘பண்பாட்டு நிலவுரு’ என்பதும் இதன் அங்கமாக்கப்படுகிறது.
அதன்படி இயற்கைமீது வினைபுரிதலூடாக மாற்றியமைக்கப்பட்ட நிலவுரு அமைவுகள் கவனத்தில் எடுக்கப்பட்டன. சர்வதேச நினைவுச் சின்னங்கள் மற்றும் புலங்களுக்கான சபை (ICOMOS) சர்வதேச நினைவுச் சின்னங்களுக்கான நிதியம் (WMF), நினைவுச் சின்னங்களுக்கான சர்வதேச நிதியம் (IFM) உள்ளிட்ட சர்வதேச ரீதியாகச் செயற்படும் அமைப்புக்கள் உட்பட தேசிய ரீதியாக இதேவிடயத்தைக் கவனத்தில் எடுத்துள்ள பல நிறுவனங்களும் தொழிற்பட்டு வருகின்றன.